there is no lathi charge in kathiramangalam says edappadi

கதிராமங்கலம் கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் விளக்கம் அளிக்கும்போது, எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என கூறினார்.

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோன்று எண்ணெய் கசிவினால், நிலத்தடி நீர் பதிக்கப்படுவதாகவும், எண்ணெய் கிணறு வைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். 75க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். மேலும், கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில், கதிராமங்கலம் கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது, மக்கள் அங்கு திரண்டனர். இதனால், அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், அங்கு சென்ற அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். அதனால், சிலரை கைது செய்தனர்.

மேலும், கதிராமங்கலம் கிராமத்துக்கு அதிகாரிகள் சென்றபோது, அவர்களை ஊருக்கு நுழையவிடாமல் செய்தனர். சாலையில் வைக்கோலை போட்டு எரித்தனர். இதனால், அங்கிருந்த போலீசார், அதனை அகற்றியபோது, அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் மீது சிலர், கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் சிலரை கைது செய்துள்ளனர்.