காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் கூறியுள்ளார்.
காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு இடையே 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காரைக்குடி புதுவயலில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அதிகம் பேர் வரவில்லை. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் பேசுகையில்;- கட்சி என்றால் கடமையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிடில் அடுத்த முறை 25 சீட்டு கூட கிடைக்காது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை. காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டும்' என பேசியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 7ம் தேதி, கடந்த காலங்களில் 60 சீட் தந்தும் சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணிக் கட்சிக்கு இடம் ஒதுக்குவதைக் கணிப்பார்கள் என ப.சிதம்பரம் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
