தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா 2வது அலை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ நெருங்கி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன்,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. 

இதில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் பிளஸ் 2 தேர்வு குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் கட்டுப்பாடுகள் மட்டும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.