நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் தனது மகனை வெற்றி பெற வைத்தது மற்றும் மோடியுடன் நெருக்கம் காட்டுவதை ஆகிய காரணங்களால் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே வாரணாசி சென்று மோடிக்காக தேர்தல் பணியாற்றி அவரது கவனத்தை ஈர்த்தவர் ஓபிஎஸ். அதுமட்டுமல்லாமல் வாரணாசியில் தனது மகன் ரவீந்திரநாத் குமார் தங்கவைத்து மோடிக்கு முழுவீச்சில் தேர்தல் பணிகளை செய்ய வைத்து இருந்தார் ஓபிஎஸ். முன்னதாக பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டும்தான் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் தேனி தொகுதிக்கு மட்டும் பிரத்தியேகமாக வந்து அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்து விட்டு சென்றார் மோடி. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத் குமார் உடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதற்கு காரணம் மோடியிடம் இருந்து வந்த பிரத்யேக அழைப்பு தான் என்று அதிமுகவினர் கூறிக்கொள்கிறார்கள். இதற்கிடையே ஒரே ஒரு எம்பி மட்டுமே மக்களவையில் இருந்தாலும் கூட அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க மோடி முன்வந்துள்ளார். அதுவும் ஓபிஎஸ் மகன் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி தேனியில் மட்டும் வெற்றி மற்றும் தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கும் அளவிற்கு மோடியிடம் செல்வாக்கு ஆகிய காரணங்களால் ஓபிஎஸ் மதிப்பு அதிமுகவில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேசமயம் முதல் அமைச்சரின் சொந்த தொகுதியான சேலத்தில் கூட அதிமுக தோல்வியைத் தழுவியது. இதனால் கட்சிக்காரர்கள் மத்தியில் எடப்பாடியில் செல்வாக்கும் சரிய ஆரம்பித்து உள்ளது. இடைத் தேர்தல்களில் கணிசமான தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும் கூட அந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் டெல்லியின் தயவு தேவைப்படும்.

டெல்லி பாஜக தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் ஓபிஎஸ் இதனை கச்சிதமாக செய்வார் என்று அதிமுகவில் ஒரு தரப்பினர் நம்ப ஆரம்பித்து உள்ளனர். இதேபோல் டிடிவி தினகரனை நம்பிச்சென்ற முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது தங்கள் பார்வையை ஓபிஎஸ் நோக்கி திருப்பி உள்ளனர். இதனால் அதிமுகவில் இழந்த செல்வாக்கை படிப்படியாக ஓபிஎஸ் அடைந்து வருகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.