ஆம்! கடந்த சில நாட்களாகவே துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆளுமையும், மக்கள் செல்வாக்கும், மத்திய அரசிடமிருந்த நட்பும் சரிந்து கொண்டே வந்தது. 

இந்நிலையில், தமிழக மக்கள் மனதிலும் அவரது அதிகாரத்துக்கு சிக்கல் விடும் வண்ணம் ‘டி.டி.வி - ஓ.பி.எஸ்.’ சந்திப்பு விவகாரம் வெளியானது. இதனால் மிக மோசமாக பன்னீர் பாதிக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக இதன் பின்னணியில் எடப்பாடி தரப்பு இருக்கிறது! என்பதுதான் பன்னீர் அணியின் ஆகப்பெரிய டவுட்டு. 

பன்னீர் தரப்பின் இந்த நிலையை பார்த்து எடப்பாடியார் தரப்பு சற்றே மகிழ்ந்ததும் யதார்த்தம். இந்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், நேற்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானது. 

ஆக மைத்ரேயன் கூறியது போல் ‘அணிகள் இணைந்தாலும் இணையாத மனங்கள்’ ஒருவரின் வீழ்ச்சியை மற்றொருவர் பரஸ்பரம் கொண்டாடினர். 

ஆக இன்று விடிந்ததும் ஏக உற்சாகத்துடன் எழுந்த பன்னீருக்கு, சுடச்சுட ஒரு ஷாக் கொடுத்திருக்கிறார் எடப்பாடியார். அது, பன்னீரின் சொந்தமாவட்டமும் அவரது கோட்டை என்று புகழப்படும் தேனியில் தனக்கென ஒரு பேரவையை ஏற்படுத்த வைத்திருக்கிறார் எடப்பாடியார். 

ஆம், இன்று காலையிலிருந்தே அந்த வாட்ஸ் அப் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அது, பால்பாண்டியன் என்பவரின் பெயர் மற்றும் போட்டோ போடப்பட்டு, ஒரு போஸ்டர் டிஸைன் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அதில், ’தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவியின் ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை வாழ்த்துகிறோம்’ என்று அதில் கொட்டை எழுத்துக்களில் கொட்டடித்திருக்கிறார். கீழே....’ஆர்.பால்பாண்டியன் - தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுதான் அ.தி.மு.க.வுக்குள் இன்று பிரளயத்தை கிளப்பியுள்ளது. 

இது பற்றி பேசும் நடுநிலை அ.தி.மு.க.வினர் “ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்டுவதையே குறியாக வைத்து எடப்பாடியார் செயல்படுவதாக தொடர்ந்து தகவல் வருகிறது. இது அவரது தனிப்பட்ட முடிவல்ல, டெல்லி உத்தரவு! என்கிறார்கள். 

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனால் எந்த டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உதாசீனம் நடத்தப்பட்டதோ அதே டெல்லியில் இப்போது எடப்பாடியாருக்கு பெரும் வரவேற்பும், பிரதமரோடு அகமகிழ்ந்து கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இதை டெல்லி தனக்கு தந்த அங்கீகாரமாகவும், பெருமையாகவும் நினைத்து மகிழ்கிறார் எடப்பாடி. 

அந்த உத்வேகத்துடன் தான் பன்னீரின் கோட்டையில் இப்படியொரு வேட்டு ஒன்றை பற்ற வைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க உரசல் இழுக்கும் வேலைதான். இல்லையென்றால் தேவையே இல்லாமல் பேரவை துவங்க வேண்டிய அவசியமென்ன? கட்சியில் அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறையெல்லாம்   இருக்கையில் எடப்பாடியாருக்கு என்ன தேனியில் பேரவை வேண்டியிருக்கிறது?

ஆக இது முழுக்க முழுக்க பன்னீரை அவரது கோட்டைக்குள்ளேயே புகுந்து, மட்டம் தட்டி மழுங்கடிக்கும் வேலைதான்.” என்கிறார்கள். இதற்கு பன்னீர் தரப்பின் ரியாக்‌ஷன் எப்படியிருக்கிறதென்று பார்ப்போம்!