Theme song in rap style ...!
ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்துக்காக, ராப் ஸ்டைலில் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு, அதிமுக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பாடலுக்கு பெண்கள் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் போட்டும் வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகரில், இம்மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். நடிகர் விஷால்
மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுவில் சொத்து மதிப்பு உள்ளிட்டவைகள் முறையாக குறிப்பிடவில்லை என்று நடிகர் விஷாலின் மனுவையும், ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்புமனுவில் சிலவற்றை பூர்த்தி செய்யப்படாமல் விட்டுள்ளதால் அவரின் மனுவையும் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கின. டிடிவி தினகரனுக்கு பிரஸர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தலைவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பார் என்று 39.9 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக டிடிவி தினகரன், நடிகர் கமல்ஹாசன், சீமான், அன்புமணி உள்ளிட்டோருக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள் தங்களது ஓட்டு வேட்டையைத் துவக்கி உள்ளனர். அதிமுக, திமுக, டிடிவி தினகரன், பாஜக என வேட்பாளர்கள் ஓட்டுவேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தன்போது, வழக்கமாக பாடல்கள் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை அதிமுக வித்தியாசமாக ராப் ஸ்டைலில் பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளது. பிரச்சாரத்தின்போது இந்த ராப் பாடல் ஒலிக்கும்போது, பெண்கள் உள்ளிட்ட அனைவரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
ஆல் தி சென்னை மக்களுக்கு திஸ் இஸ் அவர் தீம் சாங் என தொடங்கும் அந்த ராப் பாடலில், அதிமுக அணிகள் இணைப்பு, இரட்டை இலை சின்னம் மீட்பு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேச்சுகள் இடம் பெற்றுள்ளன.
