18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், அந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் ரத்து செய்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுகவினர் பலர் கருத்து கூறி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்று கூறியிருந்தார். 

டிடிவி தினகரன் கூறும்போது, அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே. தகுதி நீக்கம் செய்யப்பட்ட  எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள். இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என கூறியிருந்தார்.  

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஒரு தெளிவு கிடைத்துள்ளது. ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கொடுத்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சரி என்று கூறியுள்ளார். பல விஷயங்களை ஆராய்ந்துதான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே, மேல்முறையீடு செய்தால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. 

மேல்முறையீட்டால் தேவையில்லாத குழப்பம்தான் ஏற்படும். இது எதிர்பார்த்த தீர்ப்புதான். சபாநாயகருக்கு எ.எல்.ஏ.க்களை நீக்க அதிகாரம் உள்ளது. இனி குற்றாலம் செல்வது, கூர்க் செல்வது, கூவத்தூர் செல்வது போன்ற நாடகம் நடக்காது என்று தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக கூறினார்.