Asianet News TamilAsianet News Tamil

சிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.

மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் கூறும் அனைத்து ஆவணங்களையும் திரட்டுவதற்கும் இம்முயற்சியில் இலங்கை அரசின் குறுக்கீடு இல்லாமல் செய்யவும் உரிய நடவடிக்கைகளை ஐ. நா. மனித உரிமை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

 

The United States launched a campaign against the Sinhala Government .. Resolution support for lankan Tamils.
Author
Chennai, First Published May 25, 2021, 10:46 AM IST

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 

அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாகக் கூடிய அமெரிக்கக் காங்கிரசுப் பேரவையின் முதல் கூட்டத்தில் “போர் முடிந்து பனிரெண்டு ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கவோ மறு வாழ்வு அளிக்கவோ இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவோ இலங்கை அரசு எதுவும் செய்யாததைக்” கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :

The United States launched a campaign against the Sinhala Government .. Resolution support for lankan Tamils.

ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் 2012,2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் எதனையும் நிறைவேற்ற இலங்கை அரசு இதுவரை முன்வரவில்லை. மேலும் 2015-ஆம் ஆண்டில் ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தையும் 2017-ஆம் ஆண்டில் அத்தீர்மானத்தை வலியுறுத்தும் மற்றொருத் தீர்மானத்தையும் இலங்கை அரசு இதுவரை மதிக்கவோ செயற்படுத்தவோ முன்வரவில்லை. இத்தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளபடி “காமன்வெல்த் நாடுகள் உட்பட உலக நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கவோ, உண்மை அறியும் ஆணையம் அமைக்கவோ, காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க அலுவலகம் அமைக்கவோ மற்றும் அனைத்துத் தரப்பு மக்களிடம் நம்பிக்கையை ஊட்டவோ எவ்வித முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொள்ளாததை” இத்தீர்மானம் வன்மையாகக் கண்டித்துள்ளது. 

The United States launched a campaign against the Sinhala Government .. Resolution support for lankan Tamils.

“இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலமாக போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு அரசில் உயர் பதவிகளை அளித்தும், போர்க் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தும், சனநாயக சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் தலைகீழாக மாற்றி குடியரசுத் தலைவரிடம் சகல அதிகாரங்களையும் குவித்தும், சமுதாய அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகரித்தும் அவர்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டும்” செயற்பட்டு வருவதை 2021-ஆம் ஆண்டில் ஐ. நா. மனித உரிமை ஆணையர் கண்டித்துள்ளார். 2021-ஆம் ஆண்டில் ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் சர்வதேச மனித நேய சட்டத்தின் கீழ் விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ. நா. மனித உரிமை ஆணையரை வற்புறுத்தும் தீர்மானத்தை பிரிட்டன் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இலங்கையில் போர் முடிந்த 12-ஆம் நினைவு ஆண்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை காங்கிரசுப் பேரவை தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் கூறும் அனைத்து ஆவணங்களையும் திரட்டுவதற்கும் இம்முயற்சியில் இலங்கை அரசின் குறுக்கீடு இல்லாமல் செய்யவும் உரிய நடவடிக்கைகளை ஐ. நா. மனித உரிமை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் தொன்மைக் காலம் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கவும் உதவுவதற்கு சர்வதேச சமுதாயம் முன் வர வேண்டுமென காங்கிரசுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

The United States launched a campaign against the Sinhala Government .. Resolution support for lankan Tamils.

ஐ. நா. மனித உரிமை ஆணையர் அளித்தப் பரிந்துரைகளின்படி புலனாய்வு மேற்கொள்ளவும் குற்ற விசாரணை நடத்தவும் ஐ. நா. பேரவை, பாதுகாப்புக் குழு, ஐ. நா. மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அரசு முன் வர வேண்டுமென காங்கிரசுப் பேரவை பரிந்துரைத்துள்ளது. மேலும் மிக கொடூரமானக் குற்றங்கள் புரிந்த இலங்கை அரசின் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கக் காங்கிரசுப் பேரவை நிறைவேற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானத்தில் “தமிழர் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய குழுக்களில் ஒன்றாக” விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கூறியிருப்பது மிக முதன்மை வாய்ந்ததாகும். ஏனெனில் இதுவரை பயங்கரவாத இயக்கம் என்று கூறி வந்த அமெரிக்கா இப்போது விடுதலை இயக்கம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் வடகிழக்குப் பகுதி தமிழர்களின் தொன்மையானத் தாயகம் என்பதையும் இத்தீர்மானம் ஏற்றுக் கொண்டு குறிப்பிட்டிருப்பது மிக முதன்மையானதாகும். மொத்தத்தில் அமெரிக்கக் காங்கிரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் உலகம் முழுதும் உள்ளத் தமிழர்களால் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய தீர்மானமாகும். அமெரிக்கக் காங்கிரசின் தீர்மானம் இந்திய அரசின் விழிகளைத் திறக்க உதவுமென நம்புகிறேன். அமெரிக்கவுடனும் பிற சர்வதேச நாடுகளுடனும் இணைந்து நின்று ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைகளைப் பெறவும் நிரந்தர அரசியல் தீர்வு பெறவும் உதவுவதற்கு முன்வர வேண்டுமென இந்திய அரசை வேண்டிக் கொள்கிறேன்.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios