நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அச்சம் காரணமாக மதுரையில் ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவிதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ’’மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என வேதனையுற்றுள்ளார்.

அதேபோல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில், ’’மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். மாணவச் செல்வங்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை கண்டு துவளாமல், அவற்றை தன்னம்பிக்கையோடும், துணிவோடும் எதிர்கொள்ளும் உறுதியை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என அவர் பதிவிட்டுள்ளார்.