துரோகிகளுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் இடம் கிடையாது என்றும், ஸ்லீப்பர் செல்களாக உள்ள எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்கள் பக்கம் வருவார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்த அன்று அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

மேலும் தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்களை, அமைச்சர்கள் முன்னிலையில் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள தங்கள் தரப்பு ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுகவுக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்களுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர்  தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு நேரம் குறிக்கப்பட்டு விட்டதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.