திமுக சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை குறையில்லாமல் செய்திருக்கிறோம். திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி கடன்தான் பாக்கி இருந்தது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பாக்கி ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இதுதான் அதிமுக அரசு செய்த சாதனை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது. அதிமுக செய்த ஊழல் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்துள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போது தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தும் அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கொடுத்துள்ளோம். கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டியே பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளன. ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மக்களுக்காக வழங்கிய கூடுதல் அரிசியைகூட அதிமுகவினர் விட்டுவைக்கவில்லை. அரிசியிலும் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது மக்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டனர். அப்போது ரூ.1,000 மட்டுமே வழங்கிய அதிமுக அரசு, தற்போது தேர்தல் வருவதால் பொங்கல் பரிசாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500-ஐ வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கெல்லாம் மக்கள் ஏமாறமாட்டார்கள். அதிமுக அரசை விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டது.” என்று துரைமுருகன் பேசினார்.