Asianet News TamilAsianet News Tamil

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் நேரம் வந்துடுச்சு! இனிமே நீங்க வெற்றி செய்தியை மட்டுமே கேட்பீங்க! TTV

நம்மை அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம் என்கின்றனர். அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் நாம் என்ன மண் பொம்மைகளா? போர்க்குணம் கொண்ட ஜெயலலிதா அவர்களின் பிள்ளைகள் அல்லவா? 

The time has come to defeat the enemies and traitors! ttv dhinakaran
Author
First Published Oct 19, 2023, 11:58 AM IST | Last Updated Oct 19, 2023, 12:07 PM IST

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் நாம் யார் என்பதை உலகறியச் செய்வோம் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஜெயலலிதாவின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இதயம் நிறைந்த அன்பு வணக்கங்கள். தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை 'தீய சக்தி' என்று சொன்ன எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர்.

இதையும் படிங்க;- கிரீன் சிக்னல்? தமிழகத்தில் பாஜக தலைமையில் 3வது அணி? டெல்லி செல்லும் ஓபிஎஸ் - டி.டி.வி.தினகரன்?

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் ஜெயலலிதாவின் மக்கள் நல ஆட்சிக்கு முரணான வகையில் சிலர் செயல்பட்டதாலும் தீயசக்தியான திமுக அரியணை ஏறியது. எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் கிடையாது. என் உயிரினும் மேலான என் அருமை கழகக் கண்மணிகளும், என் மீது அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களும் தான் எனக்கு சொந்தம் எனக்கூறிய ஜெயலலிதா வளர்த்த இயக்கம், இன்று கயவர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கிறது. 

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கடமையை முன்னிறுத்தித்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலச்சூழல்தான் நமக்கு இப்போது உருவாகியுள்ளது. ஒரு சிலரின் சதித் திட்டங்களால் தேர்தல்களில் பெரிய அளவிலான வெற்றிகளை நம்மால் பெற முடியவில்லை என்றாலும், இன்னும் எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும் களத்தில் நின்று மக்களைச் சந்தித்து வெற்றி பெறும் திறனை இறைவன் நமக்கு வழங்கியிருக்கிறார்.

உடலெங்கும் குருதியைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளைப்போல, கழகத்தின் பெருமைகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் சக்திதான் நீங்கள். நம்மை அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம் என்கின்றனர். அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் நாம் என்ன மண் பொம்மைகளா? போர்க்குணம் கொண்ட ஜெயலலிதா அவர்களின் பிள்ளைகள் அல்லவா? எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், சோர்ந்துவிடாமல் இமயமாக உயர்ந்து நிற்கிறோம். எதிரிகளையும் துரோகிகளையும் களைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்களைப் புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். இது நமக்கான காலம். தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம்தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். 

ஒரு சில சுயநலவாதிகள் சுயலாபத்திற்காக நம்மை விட்டுப் பிரிந்து சென்றாலும், உண்மையான கழகத் தொண்டர்கள் அனைவரும் எந்தவித பலனும் எதிர்பாராமல் உழைத்துக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். அதை என்றும் நான் நினைவில் கொள்வேன். விசுவாசமிக்க தூய தங்கங்களே... எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. களம் காண்பதில் களைப்பறியா தீரர்கள் நாம். நம்மால் முடியாதது எதுவுமில்லை. இனிவரும் காலங்களில் நீங்கள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்பீர்கள். அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் நாம் யார் என்பதை உலகறியச் செய்வோம். 

ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்கிய கோவை தற்போது எதிரிகள் மற்றும் துரோகிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்காலிகமாக குடி கொண்டிருக்கும் அவர்களை அகற்றிவிட்டு, கோவை என்பது ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களின் கோட்டை என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவே வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவை, சின்னியம்பாளையத்திலுள்ள 'பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில்' நடைபெற உள்ள கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். அந்தநாள் எப்போது என ஆவலுடன் காத்திருக்கிறேன். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உங்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் நிச்சயம் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மக்களைச் சந்திப்போம், உங்களோடு நானும் வருகிறேன். புதிய சரித்திரம் படைக்க புறப்படட்டும் ஜெயலலிதா அவர்களின் இந்தப் படை. "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாவோம்! என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios