தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்... 
"மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளைப் பறிப்பது,அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்குக் கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்குக் கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்குப் பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள்,கல்வித்துறை செயற்பாட்டாளர்கள் என்று அனைத்துத் தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.கல்வியில் ஏற்படும் எந்த மாற்றமும் சமூக, பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் காரணங்களாலேயே இந்த தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் எனப் பலரும் கோரி வருகின்றனர்.இதன் காரணமாகவே தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கல்வித் திட்டத்தை நிராகரிக்கக் கோருகின்றன. திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசு இத்திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இந்தத் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளன.

இந்த நிலையில், இன்று தமிழக அரசு மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டுமெனவும், தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளாது எனவும் கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்ததே. மும்மொழிக் கொள்கை என்பது இந்தத் திட்டத்திலுள்ள கைவிட வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று.அதேசமயம், மாநில உரிமை, சமூக நீதி, பாலினச் சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உத்தரவாதம் உள்ளிட்ட பல அம்சங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இவற்றைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனவும் இந்தக் கொள்கையை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

மும்மொழிக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடக் கூடாது என்பதை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.எனவே, இந்தக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தாது என தமிழக அரசு, மத்திய அரசிடம் உறுதிபடத் தெரிவிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது".