தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் எனவும்,  உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்கள் போராடி வந்த நிலையில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் உறுதி அளித்தனர். 

ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

நீதிமன்ற தீர்ப்பு எதிராக செயல்பட முடியாது என கூறி தங்களது விளையாட்டை முடித்து கொண்டனர் தமிழக அமைச்சர்கள். 

இதையடுத்து அடுத்த நாளே கலந்தாய்வை தொடங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து டாக்டராகிவிடுவோம் என்ற எண்ணத்தில் திளைத்திருந்த மாணவர்கள் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது தமிழக அரசு. 

இதனால் மனமுடைந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைதொடர்ந்து, மக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் இருக்கும் அரசியல் கட்சி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் எனவும்,  உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.