ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டியதற்கு காரணமாக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பிரேமலதாவுக்கு, மேடையில் இருந்த ஒருவர் துண்டுச் சீட்டு ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார். அதனைப் படித்த பின்பு பிரேமலதா, இப்போது அதிர்ச்சி தருகின்ற தகவல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால், உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசை, மத்திய அரசு திடீரென கலைத்துவிட்டது. அதே சமயம் நீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசை, நீதிமன்றம் கலைத்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பிரேமலதா விஜயகாந்த் ஒரு நிமிடத்துக்குப் பிறகு, இன்று என்ன நாள்? ஏப்ரல் ஃபூல் என்பதால் அவ்வாறு கூறினேன் என்றார். மேலும் பேசிய அவர், இன்று முட்டாள்கள் தினம். இப்படித்தான் மக்களை ஆட்சியாளர்கள் முட்டாள்களாக வைத்துள்ளனர். நாம் அவர்களை முட்டாள்களாகக்க வேண்டும். இந்த முட்டாள்கள் தினத்தில் நான் இங்கு சொன்னது வெகுவிரைவில் நடக்கும். ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.