இதனால் ஆளுநர் கையெழுத்து போடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க ஆளுநர் மட்டும்தான் முக்கியம். அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன்.

ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்துவிடலாம். ஆனால், ஆளுநரின் கையெழுத்து இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் பாஜகவுக்கும் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் (டி.ஆர்.எஸ்.) இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் டிஆர்எஸ் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ். அண்மையில் ஹைதராபாத்தில் ராமானுஜரின் சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது அவரை வரவேற்காமல் புறக்கணித்தார் சந்திரசேகர ராவ். பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள நிலையில், அது தற்போது ஆளுநரைப் புறக்கணிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.

தெலங்கானாவில் ஆண்டின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரை தேவையில்லை என்று முடிவு செய்து அறிவித்திருந்தது. அரசின் இந்த முடிவுக்கு ஆளுநர் தமிழிசையை தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். அப்போது இந்த விஷயத்தையும் தொட்டுப் பேசினார். “நேற்றுதான் தெலங்கானா மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பெண் ஆளுநர் உரை இல்லாமலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். பெண்களுக்கு சம உரிமை என்று நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு பக்கம் இப்படியும் நடக்கிறது.

இது இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டமில்லை, அதனால் ஆளுநர் உரையின்றி நடத்தலாம் என கூறியுள்ளனர். ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்துவிடலாம். ஆனால், ஆளுநரின் கையெழுத்து இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. இதனால் ஆளுநர் கையெழுத்து போடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க ஆளுநர் மட்டும்தான் முக்கியம். அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன். அதிகாரத்துக்காக இதை நான் சொல்லவில்லை. அரசியல் சட்டம் அந்த உரிமையை வழங்கியுள்ளது. ” என்று தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.