The speaker did not act neutral
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகரின் உத்தரவால், நாங்கள் அனைத்தையும் இழந்தோம் என்றும் சபாநாயகர் நடுநிலை வகிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்ததை அடுத்து, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டுமென சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஜக்கையன் நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், மற்ற 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 18 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். அதே நேரத்தில், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையின்போது டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர், சபாநாயகர் நடுநிலை வகிக்கவில்லை என்றும் தகுதி நீக்க உத்தரவால் நாங்கள் அனைத்தையும் இழந்தோம் என்று கூறினார்.
சபாநாயகரின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுதான் நம்பிக்கையை இழந்தோமோ தவிர ஆட்சி மீது அல்ல என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார்.
