The Speaker and Chief Minister Edappadi Palanisamy have been engaged in intensive consultation on the disqualification of MLAs in the Chennai Chief Secretariat.
சென்னை தலைமை செயலகத்தில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தங்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவில் சசிகலாவையும் தினகரனையும் நீக்கி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதனிடையே எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என 19 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அணிமாறிய எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் விளக்கம் அளித்தார். மற்ற யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக மற்றும் தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று வரும் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று டிடிவி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து மீண்டும் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அவர்களுடன் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், அரசு வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆகியோர் உள்ளனர்.
