கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், ’ஜெயலலிதா அவர்களின் 1991ம் ஆண்டு  தேர்தல் பிரச்சாரத்தில் இரட்டை இலை அடங்கிய பதாகையை பிடித்து என்னுடைய 7வயதில் தொண்டராக கழகத்தில் உறுப்பினராக பணியை தொடங்கி, 2001ம் ஆண்டு பதினெட்டாவது வயதில் கழகத்தில் உறுப்பினராக இணைந்து இன்று வரை கழக தலைமை, தலைவர்களின் உத்தரவை ஏற்று அரசியல் களத்திலும். மக்கள் சேவையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்னால் முயன்ற அளவு பணியை மன நிறைவுடன் செய்து வருகிறேன். 2008ம் ஆண்டு இளைஞர் பாசறையில் உறுப்பினராக சேர்ந்தேன். அப்பொழுது ஜெயலலிதா என்னை பெரியகுளம் 16வது வார்டு இளைஞர் பாசறை செயலாளராக நியமித்தார். அந்தப் பொறுப்பில் கடந்த 12 ஆண்டுகளாக மன நிறைவுடன் பணியாற்றி வந்தேன். தற்பொழுது எனக்கு 37 வயதாகிவிட்டது. அந்தப்பொறுப்பை பின்வரும் இளம் தலைமுறைக்கு வழிவிட விரும்புகிறேன். நான் என்றைக்கும் கழகத்தில் தூய தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்’’எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஓரிரு தினங்களில் ஜெயபிரதீப் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘’என்னைப் பற்றிய அரசியல் சார்ந்த தங்களது பதிவுகளில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் மற்றும் புதல்வன் என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனது புகைப்படம் மற்றும் பெயரை என்னைவிட உயர் பதவியில் இருக்கும் தலைவர்களின் புகைப்படம் மற்றும் பெயரை விட பெரிதாக தெரியப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

எனது குடும்பம் சார்ந்த பதிவுகளில் எனக்கு தந்தையாகவும், கழகம் சார்ந்த பதிவுகளில் எனக்கு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நமது ஒருங்கிணைப்பாளர் என்பவர் நமது கழகத்திற்கும் தொண்டர்களுக்கும் பொதுவானவர். நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடாது. என் தந்தையின் நற்பெயர் எனது தந்தை அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக , ஒரு மாபெரும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், நான் பொதுவாழ்க்கைக்கு வந்த இந்த 21 ஆண்டுகளில் எனது தந்தையின் பெயர் மற்றும் அவருடைய அதிகாரத்தை அரசு நிர்வாகத்திலோ கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலோ நான் என்றைக்குமே எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியது கிடையாது. 

விசுவாசமான தொண்டன் என்றைக்கும் ஒரு தலைவனின் மகனாக என்னை நான் கருதியதில்லை. மக்கள் பணி செய்யும் ஒரு விசுவாச மிக்க ஓ.பன்னீர்செல்வம் என்ற கழக தொண்டனின் மகனாகவே மனதளவில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன். தொண்டனாக இருக்க விரும்புகிறேன். இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவவி அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பின்பற்றும் கழக தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்" என ஜெயபிரதீப் கூறியள்ளார்.

திடீரென இப்படியொரு அறிக்கை ஜெயபிரதீப்பிடம் இருந்து வரக்காரணம் என்ன? ஓ.பி.எஸ் மகன் என்பதையும் தாண்டி, ஆன்மீகம், மக்கள் சேவை, தொண்டர்களை அரவணைத்துச் செல்வது என ஆக்டிவாக இருப்பவர் ஜெயபிரதீப். தமிழகத்தில் 38 இடங்களில் 37 தொகுதிகளில் மண்ணை கவ்விய அதிமுக கூட்டணியில் ஒற்றை ஆளாய் வெற்றி பெற்றது ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் மட்டுமே.

 

அதனாலோ, என்னவோ அவரது வெற்றியின் மீது விழுந்த சந்தேகக் கண்கள் இப்போதுவரை அகலாமல் அவர் மீது பதிந்து கிடக்கிறது. பாஜக நெருக்கத்தால் ஓட்டு மெஷினில் கோல்மால் செய்து அவர் வெற்றி பெற்றதாக ஒரு தரப்பும், பண மழை ஓ.பி.ஆரை வெற்றி பெற வைத்தது என மற்றொரு தரப்பும், ஆளாளுக்கு காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஓ.பி.ஆரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது சகோதரர் ஜெயபிரதீப் என்கிறார்கள். வெற்றி பெறுவது சிரமம் என்கிற செய்திகள் வந்த நிலையில், சென்னையில் இருந்து ஒரு குழுவை தேனி தொகுதிக்கு வரவழைத்து தனிப்பட்ட முறையில் சர்வே எடுக்க வைத்திருக்கிறார் பிரதீப். சர்வே டீம் தந்த ரிப்போர்ட் படி எங்கெங்கே என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன.

அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எல்லாம் கண்டுபிடித்து அத்தனையையும் சரி செய்து இருக்கிறார். அத்துடன் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கட்சியின் முக்கிய பொருப்பாளர்களை எல்லாம் அழைத்து கூட்டம் போட்ட பிரதீப் 45 நிமிடங்கள் உருக்கமாகப் பேசினாராம். பேசி முடித்தபோது அவரோடு சேர்ந்து அங்கிருந்த அத்தனை பேரும் கண்கலங்கி போனார்களாம். இந்த டச்தான் ரவீந்திரநாத்தை வெற்றி பெற வைத்தது என சொல்கிறார்கள். 

அப்படிப்பட்ட ஜெயபிரதீப்பிடம் இந்த அறிக்கைகள் வெளிவரக்காரணம், விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்கமல் விவகாரம் என்கிறார்கள். இந்த ராஜ்கமல் இருப்பது சென்னையில். ஆனால், சொந்த ஊர் அருப்புக்கோட்டை எனக்கூறி,  தகவல் தொழில்நுட்ப பிரிவு, விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.

 

ஆனால், இவர் சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இல்லை என புகார் வாசிக்கப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப், ராஜ்கமலின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர். தேனியில் படித்தவர். இந்த தகுதிய மட்டும் வைத்துக்கொண்டு ஜெயபிரதீப் ஆதரவால் விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச் செயலாளராகி இருக்கிறார் எனப் புகார் வாசிக்கப்பட்டு வருகிறது. இந்த மன அழுத்தத்தால் தான் ஜெயபிரதீப் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ராஜ்கமல் விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளாராக ஜெயபிரதீப் ரெகமெண்ட் செய்யவில்லை என்கிறார்கள்.