முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா வங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் தயாரிப்பு நிலையங்களை கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்;- மத்திய அரசு அறிவித்தது போல் இ- பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும். முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். 

தமிழகம் முழுவதும் சுமார் 1,29,000 படுக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கோவையில் 6,312 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுமார் 5,821 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் இதுவரை 8,532 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

மேலும், சாதாரண சளி, இருமல், மூச்சு திணறல் என எது ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். அவ்வாறு விரைவில் வருவதன் மூலம் நோய் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை குணப்படுத்த முடியும். இல்லையெனில் இறுதி கட்டத்தில் செல்லும்போது, மருத்துவர்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துவிடும் என்றார்.