காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கால அவகாசம் முடியும் வரையுமே மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், சென்னையில்  திமுக செயற்குழு  கூட்டம் நடைபெற்றது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம், நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதேவேளையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.