பதவி வரும் போகும் ஆனால் நாம் செய்த சேவை என்றென்றும் நிலைத்து நிற்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமான பேசியுள்ளார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து, மக்கள் நல திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் கன்னியா குமரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு உதவி செய்தது தமிழகத்தில்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே அதிக அளவிலான உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் உள்ளது.புதிய அரசு மற்றும் கலைக் கல்லூரியை அதிமுக அரசு உருவாக்கியதள் விளைவாக எண்ணற்ற ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் இன்று உயர் கல்வி படிக்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழக அரசின் நீர் மேலாண்மை திட்டத்தால் தமிழகத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளது, இந்தியாவிலேயே நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. 

கொரோனா காலத்திலும் 60,000 கோடி தொழில் முதலீட்டை கொண்டு வரும் சூழலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக காணப்பட்ட தமிழகம் தற்போது உபரி மின்சாரம் உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதிலும் தமிழகமே முதலிடம் வகிக்கின்றது. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கனவை நனவாக்க உயர் அதிகாரிகளையும் சட்ட வல்லுனர்களையும் கலந்தாலோசித்து 7.5 % இட ஒதுக்கீட்டை நான் நிறைவேற்றினேன். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க சென்றார்கள். ஆனால்  7.5 % இட ஒதுக்கீடு மூலம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 313 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். 

தமிழக அரசு நீர் மேலாண்மை, வேளாண்மை, கல்வி, மின்சாரம் போன்ற துறைகளில் தேசிய விருது பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழகம் மட்டுமே, இதன் மூலம் 1650 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பதவி வரும் போகும் ஆனால் செய்த சேவை என்றென்றும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.