பண மோசடி புகாரில் எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபாவை போலீசார் விசாரணை செய்தனர். அரசியலை விட்டு என்னை விரட்டியடிக்கவே சதி நடக்கிறது என தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தீபா 20 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து தீபா பணம் வசூலித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் பேரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் மாம்பலம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியலை விட்டு என்னை விரட்டியடிக்கவே சதி நடக்கிறது. சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு முழுமையாக வெளியேறவில்லை.

இரட்டை இலையை மீட்கவே அவர்கள் நாடகம் நடத்துகின்றனர். சசிகலா குடும்பமே அதிமுகவின் பின்னணியில் இருந்து இயக்குகிறது.

கணவர் மாதவன் கருத்து என்று பல வதந்திகள் பரப்பபடுகின்றன. மீண்டும் தேர்தல் வரவேண்டும். மக்கள் யார் வேண்டும் என்று தேர்வு செய்யட்டும்.

அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தாலும் நான் ஏற்கமாட்டேன். பண மோசடி புகார் கொடுத்தவர் யார் என்றே தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.