Asianet News TamilAsianet News Tamil

நம்பிக்கை துரோகம்.. பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.. வெளுத்து வாங்கும் அழகிரி.!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி, மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், தமக்கு வாக்களித்து பிரதமராக்கிய மக்களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.

The people of India will never forgive Prime Minister Modi.. KS Alagiri
Author
Tamil Nadu, First Published Apr 15, 2021, 6:17 PM IST

இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட வேண்டுமே தவிர, பாஜகவின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனாவினால் ஏற்படுகிற உயிர் பலி நேற்று 1,027 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒரே நாளில் இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

The people of India will never forgive Prime Minister Modi.. KS Alagiri

தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? இனி எடுக்கப்போகிற நடவடிக்கைகள் என்ன? கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு பல்வேறு தீர்வுகள் கூறப்பட்டாலும், முழு அடைப்பு தீர்வாகாது என்பது கடந்த கால அனுபவமாகும். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரப் பேரழிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. 137 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டியது மிக மிக முக்கியமான கடமையாகும். அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தடுப்பூசிகளை பாஜக அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?

The people of India will never forgive Prime Minister Modi.. KS Alagiri

இதுவரை 7 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் 14 நிலவரப்படி இந்தியாவில் 11 கோடியே 10 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 7 சதவிகிதம் ஆகும். இதன் மூலம், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 6,310 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டனில் 54 ஆயிரத்து 680, அமெரிக்காவில் 50 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி, மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், தமக்கு வாக்களித்து பிரதமராக்கிய மக்களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல், சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியுள்ளது. 'யாருக்கு அவசியமோ அவர்களுக்கு தான் தடுப்பூசியே தவிர, தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம் தடுப்பூசி போட முடியாது. கடுமையான பாதிப்பு யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் தடுப்பூசி போட முடியும்' என்று இவர்கள் கூறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

The people of India will never forgive Prime Minister Modi.. KS Alagiri

அதேபோல, தடுப்பூசியை விநியோகிப்பதிலும் மத்திய பாஜக அரசு மிகுந்த பாகுபாடு காட்டி வருகிறது. பாஜக ஆட்சி இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள்தொகை 12 கோடி. அங்கு ஒரு நாள் பாதிப்பு 57 ஆயிரம். இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 6 கோடி மக்கள்தொகை கொண்ட பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத் மாநிலத்தின் ஒருநாள் பாதிப்பு 4,021. அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிற மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு நீதி, பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு நீதியா? 

உலக அரங்கில் தமது புகழை உயர்த்துவதற்காக இந்தியாவில் தயாராகும் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறையை எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. உலக நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிற நிலையில் இந்தியா இருக்கிறதா? ஆனால், இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

The people of India will never forgive Prime Minister Modi.. KS Alagiri

இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போது கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களின் மொத்த உற்பத்தித் திறன் 1 கோடியே 20 லட்சம். அந்த முழுமையான திறனை உற்பத்தி செய்வதற்கு மத்திய பாஜக அரசிடம் நிதி கோரியிருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவற்கு மத்திய பாஜக அரசு தயக்கம் காட்டி, காலம் கடத்தி வருகிறது. அதனால் அந்த நிறுவனங்களால் எதிர்பார்த்த உற்பத்தியைச் செய்ய முடியவில்லை.

எனவே, கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களுக்கும் நிதியுதவியை அதிகரித்து உற்பத்தியை உயர்த்த வேண்டும். அதேபோல, ரஷ்யாவில் தயாராகும் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டுக்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களில் எவற்றுக்குத் தகுதி இருக்கிறதோ, அவற்றுக்கு அனுமதி வழங்குவதில் தீவிரம் காட்ட வேண்டும். இதன் மூலமே இந்திய மக்கள் அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி போடுவதில் வெற்றி பெற முடியும்.

The people of India will never forgive Prime Minister Modi.. KS Alagiri

கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பொது முடக்கம் செய்யப்பட்ட மறுநாள் பிரதமர் மோடி பேசும்போது, 'பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. கொரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது' என்று பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், இந்தியாவில் இன்றைய நிலை என்ன? இந்தியாவில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் கரோனா எதிர்ப்பு போரினால் கிடைத்த பலன்களா? எதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கிற பிரதமர் மோடி, அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட வேண்டுமே தவிர, பாஜகவின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios