நாட்டின் 74-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர  தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் தா.பாண்டியன் திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். 
 “இந்தியா போராடித்தான் சுதந்திரத்தைப் பெற்றது. அந்த சுதந்திரத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் நாமெல்லாம் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். வெளிநாட்டு துரோகிகளையெல்லாம் விட உள்நாட்டில் உள்ள துரோகிகள்தான் மோசமானவர்கள். உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். ஒவ்வொருமுறையும் பெட்ரோல், டீசல் வாங்கும்போது முகேஷ் அம்பானிக்கு கப்பம் கட்டுகிறோம். டாலர் கொடுத்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. டாலரிலிருந்து நாம் விடுபட வேண்டும். அதுவரை நம் நாட்டுக்கு முன்னேற்றமே இல்லை. இனியாவது ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளை வைத்து சித்தாந்தம் செய்து வரும் பாஜகவை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ அந்த கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கும்” என்று தா.பாண்டியன் தெரிவித்தார்.