சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் கடந்த மே மாதம் 25ந் தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போது 25க்குள் விமான சேவையை செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. ஆனால் கடந்த 1ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய விமான பயணிகளுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்தது. மேலும் விமான பயணிகளுக்கும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.  இதனால் கடந்த 1ந் தேதி முதல் உள்நாட்டு விமான  பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகின்றன. கடந்த வாரம் வரை வருகை, புறப்பாடு சோ்த்து 76 விமானங்கள் இயக்கப்பட்டு சுமாா் 6 ஆயிரம் போ் பயணித்தனா். 

 

கடந்த 1ந் தேதியில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை  8 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து, விமானங்களின் எண்ணிக்கையும் 87 ஆக உயா்ந்தது. இன்று பயணிகள் எண்ணிக்கை 11  ஆயிரத்திற்கும் அதிகரித்து உள்ளது. விமானங்களின் எண்ணிக்கையும் 122 ஆக உயா்ந்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து புறப்படும் 61 விமானங்களில் பயணிக்க 4764 பேரும், சென்னைக்கு வரும் 61 விமானங்களில் 6469 பேரும் பயணம் செய்துள்ளனா். ஒரே நாளில் 11,233 போ் பயணிக்கின்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் பயணிகளை விட வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன. ஐதராபாத், பெங்களூா், கொல்கத்தா, கவுகாத்தி, லக்னோ, வாரணாசி, புவனேஸ்வா், அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து அதிகமான பயணிகள் சென்னை வந்தனர். பெரும்பாலானோர் ஏற்கனவே தமிழகத்தில் தங்கியிருந்து கட்டுமானம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளா்கள். 

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றவா்கள். தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் தளா்வுகள் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தமிழகம் திரும்புகின்றனா். அந்தந்த கட்டுமான நிறுவனங்களே தங்களுடைய தொழிலாளா்களை விமான டிக்கெட் எடுத்து அழைத்து வருவதாக கூறப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும், ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலையை அடைய இன்னும் பல மாதங்களாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தற்போது உள்நாட்டு விமான நிலையத்தில் சகஜ நிலை திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 196 புறப்பாடு விமானங்கள், 196 வருகை விமானங்கள் என 392 விமானங்களில் சுமாா் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவா்கள் பயணித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.