The next wedge will be for us Everyone wants to talk Meet DMK MLAs meeting today

பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற காரணத்திற்காகவும் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கிலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இந்த தகுதிநீக்க நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், குட்காவை சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்றதாக 21 திமுக எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்ற கலக்கம் திமுகவிற்கு ஏற்பட்டது. இதையடுத்து அப்படி ஒரு சூழல் உருவானால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது என்பன குறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இன்று மாலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து திமுக எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.