அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியில் தனக்குள்ள ஆதரவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சர்வே எடுத்ததாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது குறித்து அதிமுகவில் பேச்சுக்கள் எழுந்தன. அது சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் எதிரொலித்தது. இதனையடுத்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் எனக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார்.

அதேபோன்று சசிகலாவும் சிறையிலிருந்து விடுதலையாக இருப்பதால், அதிமுகவில் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் நிகழும் என்பதே பெரும் சஸ்பென்ஸாக உள்ளது. மேலும் ஜெயலலிதா இருக்கும் போதே முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்கோ இப்படியே போனால் நம்பர் 2 என்ற இடத்திலேயே இருந்து விடுவோமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கட்சியில் தனக்கு எத்தனை பேர் ஆதரவு என்பது குறித்து முதல்வர் பழனிசாமி சர்வஎடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ''89 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாகவும், சசிகலா பக்கம் 8 சதவீதமும், ஓபிஎஸ் பக்கம் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதே போன்று அமைச்சர்களின் ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது சொந்த சமூகத்திலிருந்து அவருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லை என்பதே ஓ.பிஎஸின் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தக்க வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வரும் 7ம் தேதி தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் என்றே கூறப்படுகிறது.