Asianet News TamilAsianet News Tamil

நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக்கும் புதிய சட்டவரைவு.. மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் சீமான்.

நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022' ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

The new bill that makes the people of the country modern criminals ..  seaman angry against the central government.
Author
Chennai, First Published Apr 6, 2022, 7:05 PM IST

நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022' ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து, நாட்டு மக்களைத் திறந்தவெளி கைதிகளாக மாற்ற முயலும் ‘குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு - 2022’ ஐ ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. குடிமக்களின் உயிரியல் தகவல்களைத் திரட்டிப் பாதுகாப்பதன் மூலம், மீண்டும் நவீன குற்றப்பரம்பரையினரை உருவாக்க முயலும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராளிகளை ஒடுக்கும் வகையில் இயற்றப்பட்ட சிறைத்தண்டனை கைதிகள் அடையாள சட்டம் – 1920க்கு மாற்றாக, தற்போது புதிதாக ‘குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு - 2022’ ஐ மோடி அரசு கொண்டுவந்துள்ளது. ஒன்றிய அரசின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சியினரையும், மனித உரிமை போராளிகளையும், சமூக ஆர்வலர்களையும் சட்டத்தின் மூலம் அடக்கி ஒடுக்கும் வகையிலேயே இப்புதியச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

The new bill that makes the people of the country modern criminals ..  seaman angry against the central government.

சிறைத்தண்டனை கைதிகள் அடையாளச்சட்டம் – 1920, குறைந்தபட்சம் ஒரு ஆண்டிற்கு மேல் தண்டனைப் பெற்ற, மீண்டும் மீண்டும் குற்றச்செயல் புரியும் கைதிகளின் கைரேகை, கால் தடம், புகைப்படம் ஆகியவற்றை எடுத்து, பாதுகாக்க வழிவகை செய்கிறது. ஆனால், தற்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட வரைவானது தண்டனை கைதிகள் மட்டுமின்றி, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட கைதிகளினது புகைப்படங்கள், கையெழுத்து, கையொப்பங்கள், கைவிரல் பதிவுகள், உள்ளங்கை – கால்தட அச்சுப்பதிவுகள், கருவிழி - விழித்திரை பதிவுகள், குருதி, விந்து, தலை முடி மாதிரிகள் - அவற்றின் பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் கைதிகளின் நடத்தைப் பண்புகளின் குறிப்புகள் எனத் தனிமனிதரின் அனைத்து விதமான உயிரியல் தரவுகளையும் முற்று முழுவதாகச் சேகரிக்கவும், அவற்றைச் சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வுசெய்யவும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு இச்சட்டவரைவு அனுமதி வழங்குகிறது.

அவ்வாறு, மாநில காவல்துறையால் கட்டாயப்படுத்தி சேகரிக்கப்பட்ட உயிரியல் தரவுகள் ஒன்றியக்குற்ற ஆவணக்காப்பகத்திடம் (NCRB) ஒப்படைக்கப்பட்டு 75 ஆண்டுகள் மின்னணு வடிவத்தில் பாதுகாக்கப்படும் என்று இச்சட்டவரைவு கூறுகிறது. அதுமட்டுமின்றி, அவ்வாறு சேகரிக்கப்பட்டத் தரவுகள் நடைமுறையிலுள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் எந்தவொரு குற்றத்தையும் தடுத்தல், கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத்தொடருதல் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசுகளின் எந்தவொரு சட்ட அமலாக்க நிறுவனத்துடனும் பரப்பவும், பகிரவும் வழிவகைசெய்கிறது. மேலும், இத்தகைய உயிரியல் மாதிரிகளைத் தரமறுப்பவர்கள் குற்றவாளிகள் என்பதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எவ்விதச் சட்ட வழிகளும் இல்லை என்பதும், இச்சட்டம் எந்தளவு தனிமனித உரிமைகளைப் பறிக்கும் கொடுஞ்சட்டம் என்பதைத் தெளிவாக விளக்குகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு காவல்துறையை நவீனப்படுத்துவது தேவைதான் என்றாலும், அவை தனிமனித உரிமையைப் பாதிக்காமல், தொடர்புடைய மாநில அரசுகளின் மூலமே நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதனைவிடுத்து, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையானது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில், அதனை நவீனப்படுத்துவதாகக்கூறி, காவல்துறை அதிகாரத்தை ஒன்றிய அரசு பறிக்க முயல்வதன் முதற்படியே இச்சட்டவரைவாகும். இது மாநிலத்தன்னாட்சிமீது விழுந்துள்ள மற்றுமொரு பேரிடியாகும். மேலும், சராசரி இந்தியக்குடிமக்களின் வயதே 70 ஆண்டுகள் என்ற நிலையில், ஒரு குற்றவாளி தண்டனைப் பெற்று விடுதலையான பிறகும்கூட, 75 ஆண்டுகள் வரை தொடர்புடையவரின் அனுமதியின்றி அவரது உயிரியல் தகவல்களைச் சேகரித்து வைப்பது எவ்வகையில் நியாயமாகும்? எனவே, இத்தகைய உயிரியல் தரவுகள் பெறப்படுவதன் அடிப்படை நோக்கம் தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினர், பகுதியினர் மட்டுமின்றி அவர் சார்ந்த இனத்தையே குற்றவாளிகளாகச் சந்தேகித்து கண்காணிக்கவும், அவர்களை நவீன குற்றப் பரம்பரையினராக வகைப்படுத்தவும் முடியும் என்பதால் இச்சட்டம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை உணர முடியும். 

The new bill that makes the people of the country modern criminals ..  seaman angry against the central government.

இந்தியாவில் குடிமக்களின் தனிப்பட்டத் தகவல்களது ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கான சட்டத் திட்டங்களோ, நிர்வாகக்கட்டமைப்புகளோ இல்லாத நிலையில், சேகரிக்கப்படும் உயிரியல் தரவுகள் பாதுகாக்கப்படும் என்பதையும், முறைகேடாகப் பயன்படுத்தப்படாது என்பதையும் அரசு எவ்வாறு உறுதி செய்யும் எனும் கேள்விக்கு என்னப் பதிலுண்டு? ஏற்கனவே, ஆதார் அட்டையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கைரேகை முதல் கருவிழி வரை பதிவு செய்யப்பட்டு அவற்றின் தகவல்களே திருடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதைவிடவும் அதிகத் தகவல்களைச் சேகரிப்பது தேவையற்றது மட்டுமின்றி, பாதுகாப்பானதுமல்ல. இந்துத்துவக்கொடுங்கோலர்களால் இசுலாமியப்பெருமக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்ற தற்காலச்சூழலில், இச்சட்ட வரைவிலுள்ள பல்வேறு பிரிவுகளின் விதிகள் விளக்கமாக வரையறுக்கப்படாமல், அவசர அவசரமாக மக்களவையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது பெருத்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ‘தண்டனை பெற்றவர்கள் மற்றும் பிற நபர்களது உயிரியல் தரவுகள் சேகரிக்கப்படும்’ என்ற வரைவின் கூற்றில் பிற நபர்கள் என்றால் யார் என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை.

 எனவே, இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் விசாரணை கைதிகள் மட்டுமின்றி, ஆட்சிக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சியினர் முதல் தனிமனிதர் வரையிலும் இத்தகைய உளவியல் அடக்குமுறையை ஏவி, பழிவாங்கவும், அச்சுறுத்தவும், அவர்களின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் இச்சட்டவரைவானது வழிகோலுகிறது.

“எந்தவொரு குற்றத்திற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் தனக்கு எதிராக, தானே சாட்சியாக இருக்கக் கட்டாயப்படுத்தக்கூடாது” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 20(3) கூறுகிறது. தானாக, முன்வந்து சோதனைமேற்கொண்டாலும், அதைச் சாட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், வழக்கு விசாரணையின்போது மௌனம் கடைப்பிடிப்பதுகூட அடிப்படை உரிமையாகும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இயற்றப்பட்ட 1920ஆம் வருட குற்றவியல் நடைமுறைச்சட்டம்கூட குற்றவாளியின் அடையாளங்களை மட்டுமே ஆவணப்படுத்த அனுமதி வழங்குகிறது. 

ஆனால், தற்போதைய சட்டவரைவில் உயிரியல் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரே தமக்கெதிராகச் சாட்சியமளிக்கும் வகையில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது அரசியல் அமைப்பின் அடிப்படைக்கே முற்றிலும் எதிரானது. மேலும், இதுபோன்ற தனிமனித அடிப்படை உரிமைக்கு முரணான சட்டங்கள் செல்லாதென்றும் அரசியலமைப்புத் தெளிவாக வரையறுத்து சொல்கிறது.

The new bill that makes the people of the country modern criminals ..  seaman angry against the central government.

ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்வரை அவரை நிரபராதி என்றே கருதவேண்டுமென்றும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றம் கொண்டுவர வரமுடியாது என்றும் இந்திய அரசியலமைப்புக் கூறுகிறது. அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் எந்த குற்றத்திற்காக சிறைப்பட்டிருந்தாலும், அவருக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் பொருந்துமென்றும் உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.

ஆகவே, தனிமனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் முற்றாகப் பறிக்கும் வகையில் அடிப்படை அரசியலமைப்பிற்கே எதிராகவுள்ள ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022’யை சனநாயகத்தின் மாண்புகளை காக்கப்போராடும் அனைத்து அரசியல் கட்சியினரும், மனித உரிமை அமைப்புகளும், சமூகச்செயற்பாட்டாளர்களும் எதிர்த்துப் போராடி, அதனைத் திரும்பப்பெறச் செய்ய களத்திற்கு வரவேண்டுமென அழைத்து, அறைகூவல் விடுக்கிறேன். மேலும், நாட்டு மக்களின் ஒட்டுமொத்த தரவுகளையும், ஒன்றிய அரசின் ஆளுகைக்குள் கொண்டுவருவதன் மூலம் ஒற்றையாட்சியின் கீழ் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியப்பெருநாட்டினை மாற்றி நிறுத்த வழியேற்படுத்தும் இக்கொடுங்கோன்மை சட்டவரைவு நிறைவேற முடியாதபடி பாஜக அரசுக்கெதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வரைவு தீர்மானத்தைத் தோற்கடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios