அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு திமுக அரசு பெயரை மாற்றி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறிவரும் நிலையில் தற்போது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவ திட்டம் ஒன்றிற்கு  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக திட்டங்களுக்கு அம்மா பெயர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அம்மா என பெயர் சூட்டப்பட்டது. குறிப்பாக அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா மெடிக்கல், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா காப்பீட்டு திட்டம், அம்மா இரு சக்கர வாகன உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டும் பெயரும் மாற்றப்பட்டது.

அம்மா பெயரை தூக்கிய திமுக

திருமண உதவி திட்டமாக இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவிடும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அம்மா சிமெண்ட் திட்டத்தை வலிமை சிமெண்ட் என மாற்றப்பட்டது. இதே போல பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்களின் பெயர் பலகையின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டும் மறைக்கவும்பட்டது. . இந்தநிலையில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் முழு உடல் பரிசோதனையானது செய்யப்படும். தனியார் மருத்துவமனைக்கு இணையாக இந்த முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயரை தற்போது அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.