The name of Karunanidhi is to be named on the altar

சிவாஜி கணேசன் சிலையின் பீடத்தில் கருணாநிதியின் பெயர் இருக்க வேண்டும் என சிவாஜி மணிமண்டப விழாவில் நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டமாக சிலையின் பீடத்தல் இருந்த கருணாநிதியின் பெயரை நீக்கியிருப்பது அரசுக்கு உள்ள வஞ்சக நெஞ்சத்தை எடுத்துக்காட்டுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இது கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களையும் அவமதிக்கும் செயல் என்றும் அதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழா இன்று நடைபெற்றது.

மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். விழாவில், திரையுலக பிரமுகர்கள் அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் திலகத்தின் மகனும், நடிகருமான பிரபு பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்தார்.

அப்பா எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு பெரியப்பா எம்.ஜி.ஆரும் முக்கியம் என்றார்.
தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நினைவகம் ஜெயலலிதாவின் கனவு. பெரியப்பா கருணாநிதி கட்டிய சிலை உள்ளே இருக்கிறது. 

சிவாஜி கணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். சிவாஜி சிலையின் பீடத்தில் கருணாநிதி பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். மேலும், கருணாநிதியின் பெயர் இடம் பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் வைத்தார்.

மணிமண்டப திறப்பு விழாவுக்கு வந்த அனைவருக்கும் குடும்பத்தார் மற்றும் திரையுலகம் சார்பாகவும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார்.