மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் வெளியிட்டார். 

 இந்த படம் தெலுங்கு மொழியில் தயாராகிறது. இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்நிகழ்ச்சியின் படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மத்திய மந்திரி  பிரகாஷ் ஜவடேகர் அதில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் சின்னமான மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.தெலுங்கு திரைப்படத்துறை இணைந்து தயாரிக்கும் இப்படம்  ஏபிஜே அப்துல் கலாம்: தி ஏவுகணை நாயகன்' இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் அலி பாஷா முன்னாள் ஜனாதிபதியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜானி மார்டின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' மற்றும் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' குறித்த திரைப்படங்கள் உள்ளிட்ட 5 திரைப்படத் தயாரிப்புகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட மார்டினி பிலிம்ஸ் மற்றும் பிங்க் ஜாகுவார்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிற பேனர்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளன. இதற்காக அவர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்கிறார்கள்.இவ்வாறு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

TBalamurukan