The main leaders are afraid for Political figures meet Rajinikanth

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடக அதிபர்களை சந்தித்து தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவர் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரமுகர்கள் அரசியல் ரீதியாக, பெரிய வெற்றிகளை பெற்றவர்கள் அல்ல என்றாலும், முக்கிய கட்சிகளின் பலவீனங்களையும், தேர்தல் நெளிவு சுளிவுகளையும் அறிந்தவர்கள்.

குறிப்பாக, கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையில் கூட்டணி அமைய முக்கிய பங்கு வகித்தவர் தமிழருவி மணியன். அவர், இன்று ரஜினியை சந்தித்து முக்கிய ஆலோசனை வழங்கி உள்ளார்.

அதேபோல், திமுக, அதிமுக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளை சேர்ந்த முன்னணி பிரமுகர்களும், ரஜினியை நேரடியாகவும், மறைமுகமாகவும் சந்தித்து பேசி வருகின்றனர்.

இவ்வாறு, அரசியல் பிரமுகர்கள் பலரும் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது, முக்கிய தலைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக, அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று போராடி வரும் தமிழருவி மணியன், நிச்சயமாக ரஜினியிடம், அதற்கான தெளிவான ஆலோசனை வழங்கி இருப்பார் என்றே நம்பப்படுகிறது.

அத்துடன், நடிகர் ஆனந்தராஜ், தமாகா வை சேர்ந்த யுவராஜ் ஆகியோரும் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால், ரஜினி புதிதாக தொடங்கும் கட்சிக்கு, புதுவை மாநில அமைப்பாளராக ஆனந்தராஜ் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய காட்சிகளில் உள்ள, ஓரம் கட்டப்பட்ட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்கினால், அதில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ரஜினியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சென்னை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த இரு கல்வி வள்ளல்கள், இப்போதே, தமது ஆதரவாளர்களை எல்லாம், திரட்டி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, ரஜினியின் தனி கட்சி அறிவிப்பு வெளியாகும் நாளில், அனைத்து காட்சிகளில் இருந்தும் பலர், அந்த கட்சியில் இணைவார்கள் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால், இதுவரை கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு அதிருப்தியில் ஒதுங்கி இருக்கும் பலரையும், அந்தந்த கட்சிகளின் தலைமை, அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தகவல்.