வன்முறைகளை தூண்டும் அரசியல் கட்சிகளின் பட்டியலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்யுங்கள் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் பட்டியலை நீக்கம் செய்யுங்கள் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். 

ஆனால் அதற்கான உரிமை எங்களுக்கு இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியது. இதையடுத்து ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டது. அப்போது, கட்சிகளின் பெயரை பதிவு செய்யும் தேர்தல் ஆணையத்திற்கு அதை ரத்து செய்யும் அதிகாரம் ஏன் இல்லை என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு 1998 ஆம் ஆண்டே இதுகுறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டோம் எனவும், ஆனால் அது நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்யுங்கள் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.