நீட் தேர்வு என்பது முடிந்து போன விவகாரம் என்று கூறிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் கொடுப்போம் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ராவும் பகலும் அமைச்சர்களும் எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் டெல்லிக்கும் தமிழகத்திற்கும் பறந்து பறந்து சென்றனர். 

ஆனால் அதன்முடிவு உச்சநீதிமன்றம் தலையிட்டு விட்டது. எனவே தங்களால் ஒன்றும் செய்ய இயலாது எனகூறி அடுத்த நாளே கலந்தாய்வை தொடங்கியது தமிழக சுகாதாரத்துறை. 

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் நீட் தேர்வு விவகாரமாக நானும், முதல்வரும் பிரதமரை சந்தித்து பேசி வலியுறுத்தி இருக்கிறோம் எனவும்  என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

மேலும்,  நீட் தேர்வு பிரச்னை என்பது முடிந்து போன ஒன்று எனவும், தற்போது, சட்டப்பூர்வமாக மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்பதற்காகத்தான்  மத்திய அரசின் உதவியை தொடர்ந்து கேட்டு வருகிறோம் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதைதொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் தமிழகம் முழுவது போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கால்கோள் நிகழ்ச்சியில் தம்பிதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.