மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றும் இன்னும் முடிவடையவில்லை. பெரியார் பஸ் ஸ்டாண்ட், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தேரோடும் மாசி வீதிகள், கோயிலுக்கு செல்லும் முக்கிய வீதிகளில் குழிகள் தோண்டி பணி முடிக்காமல் பாதியில் நிற்கிறது. தோண்டி தோண்டி நகரின் மத்தியில் தூசி பறந்து, தூங்காநகரம் இப்போது தூசி நகரமாக மாறி விட்டது. மக்கள் நடந்து சென்றாலே தூசியால் மூச்சு முட்டுகிறது.  அங்குள்ள வியாபாரிகளும் போராட்டத்தில் குதித்தார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் புகார் கூறியதும் அவர் சாட்டையை கையில் எடுப்பது போல் எடுத்தார். மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, ‘பணிகள் மந்தமாக நடந்தால், அந்த கான்ட்ராக்ட்டை  ரத்து செய்து வேறு கான்ட்ராக்ட் கொடுத்து சீக்கிரம் முடிக்க வேண்டியது தானே?’எனக் கூறியுள்ளார். அமைச்சரின் கட்டளையை ஏற்று மாநகராட்சி உயர் அதிகாரி, பொறியாளர்களுடன் ஆய்வுக்கு வேகமாக சென்றுள்ளனர். ஆனால், பணிகள் மந்த கதியை  கண்டும் கூட, தட்டிக்கேட்க முடியாமல் கண்ணை மூடியபடி திரும்பியுள்ளனர்.

 

ஏனென்றால், பணியை செய்தவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கான்ட்ராக்டர்கள் என்பதும், அவர்கள், கொங்கு மண்டல அமைச்சரின் ஆட்கள் என்பதால் பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு ‘கருடா சவுக்கியமா?’என்பது போல் கேட்டு மிரட்டியுள்ளனர். அதோடு நிற்காமல் வைகை நதியின் இருகரையிலும் நெடுஞ்சாலைதுறை மூலம் கான்ட்ராக்ட் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக ரூ.90 கோடியில் சாலையோர பூங்கா அமைக்க ஸ்மார்ட் சிட்டியில்  மாநகராட்சி திட்டமிட்டது. நெடுஞ்சாலை துறையோ ‘இது எங்கள் சாலை, பூங்கா அமைக்க அதிகாரம் எங்களுக்கு தான்’என்று மன்றாடுகிறது. 

மாநகராட்சி மறுக்கிறது. கமிஷன் நோக்கில் மாநகராட்சி, நெடுஞ்சாலைதுறை இடையே  முட்டல்மோதல் எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் இருந்து பாண்டிய மண்டலத்திற்கு படையெடுத்துள்ள பரமசிவன் கழுத்து பாம்புகளை கண்டு அதிகாரிகள் நடுங்குகிறார்கள். அதனால்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மெதுவாக நடப்பதற்கு  காரணம் என்கிறார்கள்.