புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டை மர்ம நபர்கள் அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பெரியாருக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கி எழுந்தனர். இது தொடர்பாக பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சரணடைந்தார். அவர் மீது சமூக அமைதிக்கு தீங்கு விளைவிப்பது உள்பட பல்வேறு வழக்குகளின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் புதுச்சேரியில்  ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி-விழுப்புரம் புறவழிச்சாலை வில்லியனூர் பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர், காவி துண்டை அணிவித்து விட்டு சென்றுள்ளர். இந்த சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக பாஜக ஏற்கனவே நிழல் கட்சியாக இருக்கும் நிலையில் காவி துண்டை எம்ஜிஆருக்கு அணிவித்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரிமற்றும் தமிழகத்தில் உள்ள அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.