தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களையும், பணிக்கு வரும் நிரந்தர ஆசிரியர்களையும் தடுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள உத்தரவில், ’’ஆசிரியர்கள் போராட்டத்தால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுதேர்வு மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வை, உடனே துவங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகளை திறந்து பாடம் நடத்த, தகுதியான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை அளித்து உள்ளார். எனவே, பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், உடனடியாக நியமிக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியருக்கான, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட்., மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு தொடக்கப்பள்ளிக்கும், குறைந்தது ஒரு தற்காலிக ஆசிரியரை நியமித்து, பள்ளிகளை இயக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக நியமனத்தை அதிகரித்து கொள்ளலாம். 'போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், உடனே பணிக்கு திரும்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வரா விட்டால், அவர்கள் மீது, நாளை முதல், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கும்.

வரும், 28 முதல், தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன், பள்ளிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்வித் துறையின் நடவடிக்கைகளுக்கும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கும் யாராவது தொல்லை தந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து, அதன் விபரத்தை கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிடப்பட்டுள்ளது.