தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சராசரியாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாயின. 234 தொகுதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதியில் மட்டும் 87.37 சதவீத வாக்குகள் பதிவாயின. தமிழகத்திலேயே இந்தத் தொகுதியில்தான் மிக அதிகபட்ச வாக்குகள் பதிவானது. மொத்தம் உள்ள 2,36,843 வாக்காளர்களில் 2,07,058 வாக்காளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். இதன் மூலம் இந்தத் தொகுதிக்குத் தனி கவனம் கிடைத்துள்ளது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் உயர்க் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் போட்டியிடுகிறார். மேலும் திமுக, மநீம, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், 2001, 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வெற்றி பெற்றார். தற்போது ஐந்தாவது முறையாக கே.பி.அன்பழகன் களமிறங்கியுள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 5,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முருகேசன் தான் மீண்டும் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் பலத்த போட்டி நிலவும் நிலையில், பாலக்கோடு தொகுதி யாருக்கு என்பது மே 2-இல் தெரிந்துவிடும்,