சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், எம்.ஏ.சிதம்பரம் மைதானம் காலியாக காட்சியளிக்கிறது. சில நூறு பேரே அமர்ந்திருப்பதால் ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த போராட்டங்களில் அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம், மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் போட்டிகள் நடத்தக் கூடாது என்று கூறி வந்தனர். 

போட்டிகளை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும், போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறினர். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதலே சேப்பாக்கம் மைதானம் சுற்றி பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போட்டி நடைபெற சில மணி நேரங்களே உள்ள நிலையில் மைதானத்தைச் சுற்றி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஓட்டலில் தங்கியிருந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் பாதுகாப்பாக மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டனர். 

காவிரிக்காக போராட்டம் நடைபெறும் நிலையில், ஐபிஎல் கேளிக்கை விளையாட்டு தேவையா என்று பாரதிராஜா உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானம் காலியாக காணப்படுவதாக கூறப்படுகீறது. 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தற்போது சில நூறு பேரே அமர்ந்துள்ளனர்.

காவிரி போராட்டத்தின் காரணமாக மைதானத்துக்கு பார்வையாளர்கள் வராததால், இதனால் ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது.