உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதும் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்  40வது நாட்களாக போராடி வந்தனர்.  விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை' எனக் கூறி பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், எஸ். போபண்ணா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்க வந்த போது வேளாண் சட்ட விவகாரத்தில் கட்டாயம் மாற்று தீர்வு தேவைப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விவகாரம் கவலையளிக்கிறது என்றனர். 

இதனையடுத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களுக்கும் நீதிபதிகள் அதிரடியாக தடை விதித்தனர். மேலும்,  மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அரசியல் சார்பற்ற குழு அமைக்கப்படும் என்றனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் வரவேற்பு அளித்தனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி! அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.