தமிழகத்தில் முழுநேர ஆளுநரை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாகவும், அரசு பெரும்பான்மையுடன் உள்ளதா என்பதை பார்க்க வேண்டியது ஆளுநரின் அரசியல் சட்ட கடமை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கூறியுள்ளார்.

எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரிடம் கடிதம் அளித்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரியிருந்தன.

ஆளுநர் வித்யாசாகர் ராவ், டிடிவி தினகரனின் 19 ஆதரவு எம்எல்ஏக்களும் அதிமுகவிலேயே நீடிப்பதால் எடப்பாடி அரசு
பெரும்பான்மையை இழந்து விட்டதாக கருத முடியாது என்றும் ஒரே கட்சி இரு குழுக்களாக செயல்படுவதால் சட்டப்படி தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவின் கூற்றுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வருகின்றனர். 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, பாஜகவை தமிழகத்தில் காலூன்ற செய்வதற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் துணை போவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்படவில்லை என்றார். தமிழகத்தில் முழுநேர ஆளுநரை நியமிக்காமல், மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக கோபண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு பெரும்பான்மையுடன் உள்ளதா என்பதை பார்க்க வேண்டியது ஆளுநரின் அரசியல் சட்ட கடமை என்றும் கோபண்ணா கூறியுள்ளார்.