தற்போதைய அதிமுக அரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு, துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறினர்.

எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ் ஆனதால், எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சி உள்ளிட்டவைகள் கூறி வருகின்றனர்

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையால், தமிழக அரசு செயல்படாத நிலையில் உள்ளதாகவு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் இல.கணேசன், தற்போதைய அதிமுக அரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

ஈரோட்டில் இன்று இல. கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போதைய அதிமுக அரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. உட்கட்சி பிரச்சினையால் இந்த தேக்கம் ஏற்பட்டு இருக்கலாம். அதிமுகவில் நடக்கும் குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் குடியரசு துணைத் தலைவர், கோவா முதலமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டதாலும், ஒரு அமைச்சரின் மறைவாலும், மூன்று முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆளுநர்களை நியமித்த பின்னர், மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.