ஹெச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாகவும் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா  குற்றம் சாட்டியுள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

இந்நிலையில், பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன. 

இதைதொடர்ந்து இன்று தனது டுவிட்டரில் பக்கத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிலர் பெரியாரின் சிலையை இரவோடு இரவாக சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சிலைகள் சேதப்பட்ட சம்பவங்கள் குறித்து மாநிலை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சிலைகள் உடைப்பு குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் உள்துறை அமைச்சகத்திற்கு மோடி பேசியுள்ளார். சிலைகள் உடைப்பு குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துமாறு கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஹெ.ராஜாவின் வருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தொடர்ந்து வன்முறைகளை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

ஹெச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.