அ.தி.மு.க. அரசின் ஆளுமைத்திறனின் லட்சணத்தை, அக்கட்சியின் தலைமை கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சிலையே வெட்டவெளிச்சமாக்கிவிட்டது! என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிலையை மறுசீரமைப்பது குறித்து அமைச்சர்கள் கருத்துக்கள் வெளியிட துவங்கியுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் “அம்மாவின் சிலை குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பரவி வருகின்றன.

இதையேற்று சிலையை மாற்றி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.” என்று கூறியிருக்கிறார். இன்னொரு அமைச்சரான மாபா பாண்டியராஜனோ “அம்மாவின் சிலையிலுள்ள முகம் மறுசீரமைப்பு செய்யப்படும். சிலை நன்றாக இருந்தாலும் கூட இன்னும் மெருகூட்ட வேண்டியுள்ளது. 15 நாட்களுக்குள் உரிய நவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

ஆக, ஜெயலலிதாவின் சிலையமைப்பு விஷத்தில் தாங்கள் தவறுதான் செய்துள்ளோம் என்பதை தெள்ளத் தெளிவாக ஒத்துக் கொண்டு அதை திருத்தம் செய்யவும் முடிவெடுத்துள்ளது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அமைச்சரவை.

இந்நிலையில், ஒரு சிலையை கூட உருப்படியாக வடிக்க தெரியாமல் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்திவிட்டனர் பழனிச்சாமி-பன்னீர் இருவரும்! என்று பொங்கியிருக்கிறார் தினகரன். “அம்மாவின் சிலை என்று சொல்லி ஒரு சிலையை திறந்துள்ளனர். அது பன்னீர்செல்வம் அம்மாவா அல்லது பழனிசாமி அம்மாவா என தெரியவில்லை. உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்று மீண்டும் நிரூபணமாகும் நிலை வரும். அப்போது, அம்மாவுக்கு சரியான சிலையை அமைப்போம்.” என்று கடுப்பேறி சொல்லியுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. அமைச்சர்களின் முடிவுப்படி சிலையில் திருத்தம் செய்யப்படும் என்றால், அது சிலையின் முகத்தை மட்டும் தட்டி, செதுக்கி, மாற்றியமைக்கும் பணிதான்! அப்படி செய்துவிட்டால் மட்டும் சிலை சீராகி, அது ஜெயலலிதா போல் மாறிவிடாது! இது மேலும் ஜெ.,வை அவமதிக்கும் செயலே!...என்று சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ‘அம்மாவின் சிலையை மேலும், மேலும் அவமதிப்பதை அனுமதிக்க மாட்டோம். தங்களுக்கு வாழ்க்கை பிச்சை போட்ட ஒரு தலைவியின் சிலையை கூட தத்ரூபமாக அமைக்க தவறிய கையாளாகாத இந்த அரசு, முழுமையாக சிலையை மாற்ற வேண்டும். அதைவிடுத்து தலையை மட்டும் தனியே சீர் செய்வோம்! என்று இறங்கினால் நாங்கள் பொறுக்கமாட்டோம். அம்மாவின் சிலையை காக்கும் முயற்சியில் இறங்குவோம்.

அதன் பின் போலீஸ் படையையே ஏவினாலும் களங்கமாட்டோம். சட்டஒழுங்கு அது இதுவென சீன் போட்டாலும் செல்லாது.” என்று சீறித் தள்ளியிருக்கின்றனர் தினகரன் ஆதரவு முக்கியஸ்தர்கள்.
என்னாகுமோ! ஏதாகுமோ!