சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடமுடியாது என்றும், இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா எனவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டமன்றத்தில் காரசார விவாதம்
சட்டப்பேரவையில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகளை சீர்செய்வதோடு, அதனை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, சாதாரண மக்களை கூட்டுறவு சங்க தலைவராக உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என்றும், 2006ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கட்சி வேறுபாடின்றி கடன் தள்ளுபடி செய்தார் எனவும் கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், சுமார் 600 கோடி அளவிலான மானியத்தை வங்கிகளுக்கு அதிமுக அரசு செலுத்தவில்லை என்றும், அந்த நிதியை தற்போதைய தமிழக முதல்வரே வங்கிகளுக்கு வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு
அப்போது குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ வேறு கேள்விக்கு சென்றால் விவாதம் தொடராது இல்லையேல் இதற்கான விளக்கத்தை நான் கூறுவேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு , இருவருமே ஒரே மாவட்டத்தை சார்ந்தவர்கள் தான், இடம் பார்த்து பேசிக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார். அப்போது எழுந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது ஜனநாயக நாடு என்றும் விவாதிக்கவே சட்டப்பேரவை கூடியுள்ளதாகவும், இதில் கண்டிஷன் எதுவும் போடமுடியாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இது அரசா அல்லது தன்னாட்சியா எனவும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து அதிமுகவினர் சட்டபேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேச்சுரிமை பறிக்கப்படுகிறது
வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்க தேர்தல் கட்சி சார்பற்று யார் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம் என்று கூறினார். அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றதாக தெரிவித்தார். சிறப்பான முறையில் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐந்தாண்டு ஆயுட்காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ளனர் வேண்டுமென்றே அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்தலை தடுக்கவேண்டும் நோக்கத்தில் திமுக அரசு சட்ட முன்வடிவு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் ஐந்து நிமிடம் பேசினாள், அமைச்சரோ 50 நிமிடங்கள் அதற்கு பதில் அளிக்கிறார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரத்தை அமைச்சர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் அதிமுக உறுப்பினர்களுக்கு அமைச்சர் கட்டளை பிறப்பிக்கிறார். இப்படித்தான் பேச வேண்டும் என்று கூறுகிறார். சட்டமன்றத்தில் பேச்சு உரிமை பறிக்கப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
