The Election Commission has started a final inquiry into the twin leaf.
இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த இறுதி கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதில் அமைச்சர்கள் சிவி. சண்முகம், உதயக்குமார் மற்றும் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சருமாக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்தது.
அதாவது சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது.
இதைதொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனனும் சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர்.
இதில் உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்றும், கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் இரு தரப்பும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதனால் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
இதையடுத்து இரு அணியும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தது. இதனிடையே எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. இதனால் எடப்பாடி சசிகலாவையும் டிடிவியையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதித் தீர்ப்பை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த கெடுவை நவம்பர் 10 ஆம் தேதியாக உச்சநீதிமன்றம் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகள், இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6 ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதன்படி இன்று இறுதி கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
இதில், அமைச்சர்கள் சிவி. சண்முகம், உதயக்குமார் மற்றும் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
