the EC is in action against TTV Dinakaran

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 15 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் முதல்வர் பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். சின்னம் தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தினகரன் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்களை செப்டம்பர் 29-க்குள்(இன்று) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து ஏற்கனவே கட்சி பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கிய தீர்மானம், இரட்டை இலை சின்னத்தை மீட்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றின் நகலை முதல்வர் பழனிச்சாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், ஏற்கனவே கூறியபடி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் எனவும் விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திக்கற்று திணறுகிறாராம் தினகரன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தினகரன் ஆவணங்களை தாக்கல் செய்வாரா? இல்லையா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.