அதிமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும், அதிமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதற்கான காய் நகர்த்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக அடிமட்ட கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:  அதிமுகவின் பொது எதிரி திமுக தான், கடந்த நான்கே முக்கால் வருடங்களாக மக்கள் பக்கம் தலை காட்டாத அவர்கள் தற்போது விவசாயிகளுக்காக கருப்பு கொடி ஏந்தி போராடுகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட வேளாண்சட்டத்தை எதிர்க்கிறார்கள். அதற்கு ஏன் தமிழ்நாட்டில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துகிறார்கள், நாடாளுமன்றத்தில் அக்காட்சியை சேர்த்தே எம்பிக்கள் அங்கே அதை எதிர்க்க வேண்டியதுதானே. மொத்தத்தில் அவர்கள் மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள். அதிமுக என்னும் மலையை எத்தனை போராட்டங்கள்  நடத்தினாலும் திமுக என்ற  எலியால் அசைக்க முடியாது, காவல்துறையினரையும் அரசு அதிகாரிகளையும் உதயநிதி மற்றும் திமுகவினர் மிரட்டி வருகின்றனர், அதுபோல எந்த அதிமுகவினராவது மிரட்டுகிறார்களா? நீதிபதிகளாக உள்ள மக்கள் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த ஆட்சியில் ஜாதி மத சண்டை கிடையாது, விலைவாசி உயர்வு இல்லை, சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது, தமிழகம் நிர்வாகத் துறையில் சிறந்து விளங்குகிறது, குடிமராமத்து நாயகன் முதல்வர், ஏரி குளங்கள் அனைத்தையும் தூர்வாரியதால் தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. நல்ல ஆட்சி நடைபெறுவதால் மும்மாரி மழை பெய்து வருகிறது, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல் புதிது புதிதாக காட்சிகள் உருவாகின்றன, பல பேர் 100 நாள் கட்சியை நடத்தி 101வது நாள் முதல்வர் ஆகலாம் என நினைக்கின்றனர் அது நடக்காது. வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை, சுமார் 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் அதிமுகவின் வெற்றி எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.