சாதிக் பாட்சா கொலை வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் சிறை செல்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான காய்நகர்த்தல்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக-திமுகவுக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. ஆ. ராசா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களை தரக்குறைவாக விமர்சித்ததைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சாதிக் பாட்சா கொலை வழக்கில் மு.க ஸ்டாலின் சிறை செல்வார் என கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த காலங்களில் திமுக செய்த ஊழல் எண்ணிலடங்காதவை, குறிப்பாக கண்ணுக்கு தெரியாமல் காற்றில் வரக்கூடிய அலைக்கற்றைகானா 2ஜி ஸ்பெக்ட்ரம்மில் 1.78 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். இப்பிரச்சனையில் அப்போதைய காங்கிரஸ் அரசால் வழக்கு தொடுக்கப்பட்டு திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, கனிமொழி எம்பி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதை நாடு இன்னும் மறக்கவில்லை, 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம், அதேபோல் ஸ்டாலினும் வாய்க்கு வந்தபடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலரை உள்ளே தள்ளுவோம் என்று பேசி வருகிறார். மாறாக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வோம் என்று ஸ்டாலின் கூறவில்லை, 2021 மீண்டும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அம்மா ஆட்சி அமைந்தவுடன், பெரம்பலூர் சாதிக் பாட்சா கொலை வழக்கு, அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு ஆகியவற்றை விசாரிக்கும் போது, ஸ்டாலின் நிச்சயம் சிறை செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.